/ Aug 07, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

தமிழீழ விடுதலைக்கு அரும்பணியாற்றிய அற்புத மனிதர் கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள்.

நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
17/12/2024

தமிழீழ விடுதலைக்கு அரும்பணியாற்றிய அற்புத மனிதர் கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள்.

தாயக விடுதலையை தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த, அற்புதமான மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது. தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த, ஒரு பெரும் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக நின்று, முனைப்புடன் செயல்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் இயற்கையின் கோரப் பசிக்குப் பலியாகிவிட்டார். இந்த உன்னத மனிதரை இழந்து இன்று எமது தேசம் மீளாத் துயரில் மூழ்கிக் கிடக்கின்றது.

மீளாத்துயில் கொண்ட கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள், ஈழத் தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் உயர்ந்த கல்வித் தகைமை பெற்றிருந்தும், வளமான பொருளாதார வல்லமை மிக்கவராயிருந்தும், நீண்ட காலமாக எமது மக்களின் தேச விடுதலைப் போராட்டத்திற்கு, அவர் ஆற்றிய அரும்பணிகள் அபூர்வமானவை. அவரது சகோதரர்களில் ஒருவரான மாவீரர். லெப். அர்ச்சுனா (ஆர்.பி.ஜி. அர்ச்சுனா) அவர்களை, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த பின்பும், எமது தாயக தேசத்தின் விடுதலைப் போரில் பற்றுறுதி கொண்டு அவர் ஆற்றிய அரும்பணிகளுக்கு, எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும், தமிழீழ மக்கள் சார்பாகவும் எங்களது உணர்வுபூர்வமான வீரவணக்கத்தைத் தெரிவிக்கின்றோம்.

இக்கட்டான சூழ்நிலைகளிலெல்லாம் எமது தேசிய தலைவரின் உற்ற நண்பனாய், காவலனாய், ஆலோசகனாய், தலைவர் அழைத்தபோதெல்லாம், அருகில் சென்று அவர் ஆற்றிய பணிகள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், அதனை நன்கு அறிந்தவர்கள் என்ற வகையில், அவரது விடுதலை வேட்கையின் வீரியத்தை எங்களால் விளங்கிக் கொள்ளமுடிகின்றது. பிரித்தானிய நாட்டில் வாழ்ந்த போதும், “நான் ஒரு தமிழீழத்தாய் பெற்றெடுத்த மண்ணின் மைந்தன்“ என்ற தாயகப் பற்றுணர்வுடன், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் போற்றத்தக்கவை. தன்னாட்சி உரிமை கோரும், எமது மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது என்பதை நன்குணர்ந்து, தனக்கு ஏற்படப்போகும் உயிராபத்துக்களைக் கூடப் பொருட்படுத்தாது, எமது உரிமைப் போருக்குப் பெரும்பங்காற்றிய அவரின் சுதந்திர வேட்கையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. தமிழீழ மக்கள் தன்னாட்சி உரிமை பெற்று சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே அவரது தணியாத இலட்சியமாக இருந்தது. அந்த உன்னத இலட்சியத்திற்காக துணிவுடனும், நேர்மையுடனும் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை ஓயாது பணியாற்றி வந்தார் என்பதை நாம் நன்கறிவோம்.

அவர் அற்புதமானதோர் மனிதர், உன்னதமான தேசப்பற்றாளர். சுயநல வாழ்வைத் துறந்து எம்மின விடுதலைக்கு அரும்பணி ஆற்றிய, சிறந்த மனிதர்களுக்கு மதிப்பளித்து கௌரவம் செலுத்துவது தமிழரின் வரலாற்றுப் பண்பாடு. இந்தச் சீரிய மரபிற்கேற்ப, அவரது உறுதியான இனப்பற்றுக்கும், விடுதலை வேட்கைக்கும் மதிப்பளித்து, அவர் ஆற்றிய விடுதலைக்கான நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக, தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான “மாமனிதர்” என்ற விருதினை, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, கலாநிதி. சதாசிவம் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்குவதில் தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பெருமை அடைகின்றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உன்னத மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

திருமதி.ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்.

 

ranjanindirahosting@gmail.com

RECENT POSTS

CATEGORIES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *