/ Aug 07, 2025
நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
26/04/2025
பூகோளத்தின் உயரிய ஆன்மீகத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ்!
கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவு, உலக வாழ் கத்தோலிக்க மக்களையெல்லாம், ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. மானிடத்தின் விடிவிற்காக அயராது உழைத்த, ஒரு மகத்தான ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்து விட்டது.
கடந்த 12 ஆண்டுகளாக, வத்திக்கான் நகரின் தலைவராக ஆட்சிபுரிந்த, ஆஜென்டினா நாட்டைச் சேர்ந்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல வரலாற்றுச் சிறப்பம்சங்களைக் கொண்டவர். கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே, தென் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையும் இவரே ஆவார்
உலக சமாதானத்திற்கும், தேசங்கள் மத்தியிலான சகவாழ்விற்கும், சகல மதத்தவர்களினதும் நல்லுறவுக்கும், புனித பாப்பரசர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை; அனைவராலும் வியந்து பாராட்டத்தக்கவை. உலகத்தின் உயரிய ஆன்மீக தலைவர் என்ற ரீதியில், வறுமைப்பட்ட மக்களையும், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றவர்களைக் காப்பாற்ற அயராது உழைத்ததோடு, ஒடுக்கப்பட்ட இனங்களது விடிவிற்காகவும் அவர் அரும்பணியாற்றினார். அன்பு, காருண்யம், சகோதரத்துவ பண்பு போன்ற சீலங்களை அவர் பரப்புரை செய்து, அதன்படி வாழ்ந்தும் காட்டினார். சுதந்திரம், விடுதலை, சமத்துவம் போன்ற உயரிய மனித விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைத்து மனிதப்பிறவிகளும், பாப்பரசரின் அறநெறிப் பிரசங்கங்களையும், அவரது உயரிய சிந்தனைகளையும் உன்னதமான வாழ்க்கையையும், என்றும் தமது நெஞ்சில் நிறுத்தி அவரை கௌரவிப்பார்கள்.
அசாத்தியமான செயற்திறனுடன் ஆன்மீகப் பணியாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது ஆன்மீகப் பணி எப்போதும் உலக மக்களால் நன்றி உணர்வுடன் நினைவு கூரப்படும். பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்களின் இழப்பால் துயருறும் கத்தோலிக்க மக்களுக்கும், வத்திக்கான் திருச்சபைக்கும்,தமிழீழ மக்களோடு இணைந்து, தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கி.நல்லையா
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
ச.அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info