/ Aug 07, 2025
நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
23.05.2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரின் தந்தை சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களின் தந்தையாரும், வடமராட்சி, வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த புகழ்பூத்த கல்வியாளரும், ஓய்வுபெற்ற துணை அதிபருமாகிய சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்கள், கடந்த 12.05.2025 அன்று பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தான மாவீரனின், தந்தையாரது மறைவுச் செய்தி, உலகத் தமிழ் மக்கள் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி வளர்க்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே, விடுதலைப் புலிகளின் அத்திவாரக் கற்களில் ஒருவரும், முதல் மாவீரனுமாகிய லெப்டினன்ட் சங்கர் – சத்தியநாதன் அவர்களைப் பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கி, ஓர் ஒப்பற்ற விடுதலை வீரனாக, தமிழீழ விடுதலைப் போருக்கு உவந்தளித்த பெருவிருட்சம், இன்று கண்மூடித் துயில் கொள்கின்றது.
இனவெறி பிடித்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ என்றும் இவர் விரும்பியதேயில்லை. அந்த ஒடுக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வும் சிக்குண்டு சிதைந்து போவதை, இவர் அறவே வெறுத்தார். இந்த அடக்கு முறையாளர்களின் கோரப்பிடியிலிருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுதலை பெற்று, சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே, இவர் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டார். இந்த உயரிய இலட்சியத்தால் உந்தப்பெற்று, தனது மைந்தனை விடுதலைப் போருக்கு வித்தாக்கிய பின்னரும், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துகளுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உறுதுணையாக நின்று பல இடு பணிகளை இவர் நிறைவேற்றியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் இலட்சியத்தையும் உளமார ஏற்று, 2001 வரை தாயகத்தில் இருந்தவாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புக்களைச் செய்தார். பின்னர் புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்று, அங்கு எதிர்கொண்ட புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிகளைத் தொடர்ந்து 2003 இல். பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும், தனது இறுதி மூச்சுவரை, இலண்டன் மாநகரில் நடைபெற்ற அனைத்து விடுதலை சார் நிகழ்வுகளிலும் தனது வயோதிபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் உத்வேகத்தோடு கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் பிரித்தானியாவில் பணியாற்றும் தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாகவும் இவர் செயற்பட்டு வந்தார் என்பதை பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் நன்கறிவார்கள்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் ஊரவர் அனைவருக்கும், தமிழ் பேசும் மக்கள் அனைவரோடும் இணைந்து தமிழீழ அரசியல்துறையினராகிய நாமும், எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, இவர்களின் துயரில் நாமும் உளமாரப் பங்கெடுத்துக் கொள்கின்றோம். அமரர் சின்னத்துரை செல்வச்சந்திரன் ஐயாவின் இனப்பற்றையும் விடுதலை வேட்கையையும் மதிப்பளிக்கும் முகமாக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், தமிழீழ இலட்சியப் போருக்கு, தமது பிள்ளைகளை உவந்தளித்த பெற்றோர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனைக்கு அமைவாக, விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீர்ரின் தந்தையாகிய, அமரர் சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்களுக்கு “மாவீரத்தின் தந்தை” என்று மதிப்பளிப்பதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பெருமை அடைகின்றோம்.
சத்திய இலட்சியத்திற்காக தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களைப் போன்ற உயர்ந்த மனிதர்கள், எமது தேசத்தின் ஆன்மாவில் பெருமைக்குரிய மனிதர்களாக என்றென்றும் போற்றப்படுவார்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info