/ Aug 07, 2025
23.10.2024
“வன்னி மண்ணின் தலைசிறந்த மூத்த களமுனைப் போராளி திரு.எல்விற்ரன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்!”
தமிழீழ மண்ணை இந்திய இராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலங்களில்,
வரலாற்றுச் சமரான நெடுங்கேணிப் பாடசாலையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணும் மீதான தாக்குதலை நேரடியாக வழிநடத்தி, பெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னி மண்ணுக்கும், தமிழீழத்திற்கும் பெருமை சேர்த்தவர் போராளி எல்விற்ரன் அவர்கள்.
இவரின் திறமை கண்டு, பொறுப்பாளராகவும், சிறந்த தளபதியாகவும் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அந்நிலைகளை விரும்பாது, களமுனைப் போராளியாகவே அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
அனைத்துப் போராளிகளிடமும் அன்பாகப் பழகி, பல போராளிகளுக்கு போராட்ட யுக்திகளை வழங்கி, அவர்களைச் சிறந்த போர் வீரர்களாக உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி பிரிகேடியர் பால்ராஐ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர்.
மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது, விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராகத் தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
அவ்வேளையில் எல்விற்ரனைத் தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும், என தலைவர் கூட குறிப்பிட்டிருந்தாராம்.
பின் சிறிலங்கா இராணுத்துடன் 1990களில் சண்டை தொடங்கிய வேளையில், பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது போரிட்டுத் தடுத்தார்.
பின்னர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற கொக்காவில், மாங்குளம் முகாம்கள் மீதான வெற்றித் தாக்குதல்களில் பங்கெடுத்து பல விழுப்புண்களை தன் உடலில் தாங்கியவர்.
மீண்டும், சிறிய கால இடைவெளிக்குப் பின்னர் 2009 இறுதிச் சமர்வரை களமாடினார் திரு.எல்விற்ரன் அவர்கள்.
பல போராட்ட களங்களில் நெஞ்சுரத்தோடும், தளராத துணிவோடும் போராடி பல வெற்றிகளைத் தமிழீழத்திற்குப் பெற்றுத்தந்த
சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எவ்வாறு கொடிய நோயின் பிடியிலிருந்து மீளமுடியாது சாவைத் தழுவிக்கொண்டாரோ, அவ்வாறே அவரின் தோழரான திரு.எல்விற்ரன் அவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சாவடைந்தார்.
தலைசிறந்த போர்வீரன் திரு.எல்விற்ரன் அவர்களுக்குத் தலைசாய்த்து எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info