/ Aug 07, 2025
நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
01/02/2025
“இலங்கையின் சுதந்திர தினம் – ஈழத் தமிழர்களின் கரிநாள்!”
அன்புக்குரிய தமிழீழ மக்களே !
பெப்ரவரி 4ம் திகதி ஈழத் தமிழ் மக்களுக்கு இருண்ட நாளாகும். ஈழத் தமிழர்களாகிய நாம், காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு, சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட, அவல வாழ்வின் தொடக்க நாளாகும். இதன் காரணத்தால், சிறீலங்கா சுதந்திரம் அடைந்த இந்த நாளை, தமிழீழத்தில் உணர்வெழுச்சியுடனும், புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் மக்கள் கரிநாளாகப் பிரகடனம் செய்து, பேரெழுச்சியுடன் அவரவர் நாடுகளிலுள்ள, இலங்கைத் தூதரகம் முன்பாகக் கறுப்புக் கொடியுடன் அணிதிரண்டு, துக்க தினமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கைக்கு 04.02.1948 இல் சுதந்திரம் கிடைத்தபோதும், ஈழத் தமிழர்களுக்கான அடிமை சாசனம் எழுதப்பட்ட நாளும் இந்த நாளேயாகும். ஈழத் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை சுதந்திரமான வாழ்வை அனுபவித்து வாழ, பேரினவாதச் சிங்கள அரசு அனுமதித்ததே கிடையாது. ஏறத்தாழ நாலரை நூற்றாண்டுகள் காலனித்துவ நாடுகளின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள், அதன் தொடர்ச்சியாகக் கடந்த 77 ஆண்டுகளாக பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கொடூரப் பிடிக்குள் அகப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். சிங்களப் பேரினவாதிகளின் அடக்குமுறைக்கெதிராக அறவழிப் போராட்டம், ஆயுதப் போராட்டம், தற்போது உலகளாவிய சனநாயக அரசியல் வழிமுறைப் போராட்டமென இன்றுவரை போராடியவாறே தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்றுவரை இலங்கை தீவில் தமிழ் மக்களை இல்லாதொழிப்பதற்காக, பேரினவாதச் சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது.
கடந்த 69 வருடங்களாக சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதம், அதாவது 05.06.1956 இல் முதலாவதாகத் திட்டமிட்டு நடைபெற்ற இங்கினியாகலை இனப்படுகொலையிலிருந்து, தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய, 264 இனப்படுகொலைச் சம்பவங்களின் உச்சமாக, 18.05.2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இன அழிப்புக் கோரத் தாண்டவத்தில் படுகொலைசெய்யப்பட்ட, இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களுக்கான பரிகார நீதி இன்றுவரை வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கும் எண்ணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிதாகப் பொறுப்பேற்ற அனுரா அரசாங்கத்திற்கும் இருப்பதாக இன்றுவரை எமக்குத் தெரியவில்லை. இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வருடக்கணக்காக நடாத்தி வருகின்ற போராட்டங்கள் எவருடைய மனசாட்சியையும் இன்றுவரை உறுத்தியதாகத் எமக்குத் தென்படவில்லை. சிங்கள அரச பயங்கரவாதிகளிடமிருந்து தங்களைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழீழ மக்கள் நடாத்திய ஆயுதப் போராட்டம் அமைதி பெற்று, ஒன்றரைத் தசாப்தங்கள் தாண்டியும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் சிலர், யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் முழுமையாக மீளக் கையளிக்கப்படவில்லை. தொல்பொருள் ஆய்வு, வனவிலங்குத் திணைக்களம் மற்றும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக, பலவந்தமாகக் கபளீகரம் செய்யப்பட்ட தமிழர் நிலம் முற்றாக விடுவிக்கப்படவில்லை. புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களிடையே அரசியல் ஆதாயம் பெற்றுக் கொள்வதற்காக, சில கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்திருந்தாலும், அவை யாவும் முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.
எமது மக்களின் தற்காப்புக்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவிய சர்வதேச நாடுகள், ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வில் அக்கறை செலுத்துவதாக எமக்குத் தெரியவில்லை. சர்வதேச நாடுகள் தமது பூகோள அரசியலுக்கு, பிராந்திய ஆதிக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமநேரத்தில், ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்ற இனமாக வாழ, ஆவன செய்யவேண்டுமென, நாம் எமது மக்களின் சார்பாக, சர்வதேச நாடுகளை வலியுறுத்தி வேண்டுகின்றோம்.
அன்புக்குரிய தமிழீழ மக்களே! இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து, நாங்கள் பல சிங்களத் தலைவர்களால் வெவ்வேறு அளவீடுகளில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். டொன் ஸ்டீபன் சேனாநாயக்க முதல் கோத்தபாய ராஜபக்க்ஷ வரை அனைவரின் இனவாதச் சித்தாந்தத்தையும், அதற்கு பெரும்பான்மைச் சிங்கள மக்கள் வழங்கிய பேராதரவையும், எமது இனம் கசப்பான அனுபவங்களைப் பெற்றுவாறு வாழ்ந்திருக்கின்றது. தற்போது வளமான நாடு அழகான வாழ்க்கை என்று கோசத்தோடு வந்திருக்கும் அனுர குமார திசாநாயக்கா இவர்களிலிருந்து சற்று மாறுபட்டவராக உங்களுக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் நீங்கள் அவசரப்பட்டு அவரை நம்பிவிடவேண்டாம். எந்தச் சிங்களவர் தலைவர்களாக இருந்தாலும், தமிழர்களின் அரசியல் உரிமைகளை தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமையை எமக்கு அரசியல் அமைப்பு சாசனம் ஊடாக வழங்கும் சிங்கள தலைவர்களை மட்டுமே எங்களால் நம்ப முடியும். அதனை விடுத்து எங்களுடைய தாய், தந்தை, சகோதரங்கள், சிறுவர்கள், பச்சிளம் பாலகர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் ஊரவரென கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்தவர்களோடு நாங்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும் ? இனிமேலும் அவ்வாறு கொன்றொழிக்க மாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் வழங்குவது?
அன்புக்குரிய மக்களே! இன்று வரையுள்ள இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் என்பது, மகாவம்சக் கோட்பாட்டின் அடிப்படையில் சிங்கள மக்களை மேம்படுத்துவதற்கும், சிங்களவர்களைப் பாதுகாப்பதற்குமாகவே வடிவமைக்கப்பட்ட பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள் இப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களுக்குள் தமிழர்களின் தேசியம், தமிழ் மக்களின் மேம்பாடு, தமிழர்களின் பாதுகாப்பு . போன்ற தமிழர்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது செய்ய உள்ளதாக கூறிவரும், சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவா நாங்கள் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும், இலட்சக்கணக்கான மக்களையும் இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். மிக முக்கியமாக இலங்கைத் தீவில், தமிழர்களின் இறையாண்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில், நாமெல்லோரும் அதீத கரிசனை செலுத்த வேண்டுமென, எமது மக்களை உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
2009க்கு பின்னரான ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அர்ப்பணிப்போடு எந்தத் தமிழ் தேசிய அரசியல்வாதிகளோ அன்றி எந்தத் தமிழ் தேசிய கட்சிகளோ முன்னெடுத்துச் செல்லவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக, புதிதாகத் தோன்றியுள்ள தேசிய மக்கள் சக்தியின் வெற்றுவேட்டு வார்த்தையாலங்களை நம்பி, அதன் ஆழமறியாமல் உங்களில் குறிப்பிட்ட தொகை மக்கள் கூட்டத்தினர், அவர்களுக்கு பின்னால் செல்ல நினைப்பது தவறென்பதை உணர்த்த வேண்டிய உரிமை எமக்குள்ளது.
இன்று தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றம் பெற்றிருக்கும் இதே ஜேவிபினர்தான் இறுதி யுத்தத்தில் கொத்துக்கொத்தாக தமிழர்களைக் கோத்தபாய கொன்றொழித்த போது இராணுவத்துக்கு ஆள்ச் சேர்ப்பதில் முன்னணி வகித்தவர்கள், வடக்குக் கிழக்கை சட்டரீதியாகப் பிரித்தவர்கள், சுனாமி இயற்கைப் பேரவல நேரத்தில் கூட தமிழர்களோடு ஒன்றிணைந்து செயற்பட மறுத்தவர்கள்தான், இவர்களென்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். இவர்களை நம்பி இவர்களுக்குப் பின்னால் அணிதிரள விளைவது, எதிர்காலத்தில் பேராபத்தான விளைவுகளை எமக்கு ஏற்படுத்தும், என்பதைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுவது, எமக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகின்றது.
தமிழீழ அரசியற்துறையினராகிய நாம், பெப்பிரவரி 4ம் திகதியை, கரிநாளாக எம் மக்களோடு ஒன்றிணைந்து கடைப்பிடிப்பதோடு, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலைச் சர்வதேசத்தை நோக்கி ஓங்கி ஒலிப்பதோடு, எமது விடுதலைக்கான பேரவாவை தொடர்ந்தும் பறைசாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய சனநாயக அரசியல் வழிமுறைப் போராட்டங்களை நடாத்திவரும் அனைவரும், கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒன்றிணைந்து கூட்டாக அவற்றைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டுமென, தமிழ்த் தேசிய விடுதலைக்காக, உண்மையாக உழைக்கின்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்களுக்கும் தமிழீழ அரசியற்துறை அறைகூவல் விடுக்கின்றது.
எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக, எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் என்றும் மாறாது என்ற கோட்பாட்டிற்கமைய, தமிழீழ மக்களின் விடுதலைக்கான இரத்தம் சிந்தாத அரசியல் போரை ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தமிழ்த் தேசிய சக்தியாக அணிதிரண்டு போராடி, எமது இறுதி இலட்சியமாகிய சுதந்திர தமிழீழத்தை அமைப்போம் என உறுதியேற்போமாக.
‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’
திரு. கி. நல்லையா
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
திருமதி. ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info