/ Aug 07, 2025
நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
29/12/2024
“முதுபெரும் தமிழினப் படைப்பாளி நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள்.”
தமிழீழ தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உன்னதமான இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு தமிழ் தேசியப் பற்றாளரை நாம் இழந்து விட்டோம். விடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்க சக்தியாகவும் விளங்குவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடி ஆட்கொண்டு நின்றது. இது அபரிதமான விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது. இவரது ஆழ்மனதை ஆட்கொண்டிருந்த தேசப்பற்று என்ற அபூர்வ சக்தியை, தணியாத விடுதலை நெருப்பாகப் பற்றவைத்து, அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்த, முதுபெரும் தமிழினப் படைப்பாளி நா.யோகேந்திரநாதன் அவர்களைத் தமிழீழ தேசம் இன்று இழந்து நிற்கிறது.
இயல்பாகவே தேசப்பற்று நிறைந்த இந்த மனிதருக்கு, எமது சுதந்திர இயக்கம் முன்னெடுத்து வந்த விடுதலைப் போராட்டத்தில், ஒரு இலட்சியப் பிடிப்பை ஏற்படுத்தியிருந்தது. பொதுவாகவே இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், துன்பங்கள் தெரிவதில்லை, வலிகள் தடுப்பதில்லை. இவர் போராட்ட வாழ்வில் பெரும் துயர்களையும், சுமைகளையும் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, முதுமையான வாழ்வின் உடல் உபாதைகளையும் சகித்துக் கொண்டு, விடுதலைப் போருக்கு உரமூட்டும் வகையில், தனது படைப்புக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த, மகத்தான மனிதர்களில் இவரும் ஒருவர்.
மீளாத்துயில் கொண்ட இவர், தமிழீழ அன்னை பெற்றெடுத்த, ஓர் தலைசிறந்த படைப்பாளி. வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப, தனது படைப்புக்களை இவர் படைத்திருந்தார். அவரைப் போலவே, அவரது படைப்புக்களும் உறுதியும், ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவை மட்டுமல்ல, தனது படைப்புகளினூடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும், ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் கொழுந்துவிட்டெரியவைத்தார். சிங்கள அரசு எமது தாயக மண்ணிலே நிகழ்த்திய கொடூரங்களையும், அதன் ஆழ அகலங்களையும் காலவரிசைப்படி பதிவு செய்தார். விடுதலைப் போராட்ட வாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும், பல்வேறு கோணங்களில் தனது படைப்புகளூடாக வெளிப்படுத்தியிருந்தார். தனது படைப்புக்களின் உச்ச காவியமாக அவற்றை வடித்து பல நூல்களை இவர் வெளியிட்டிருந்தார். காலத்தின் தேவையறிந்து தனது படைப்புகள் மூலம் தமிழீழ விடுதலைப் போருக்கு அன்னார் ஆற்றிய பெரும் பணிகள் போற்றுதற்குரியவை என்பதால், வாழும் காலத்திலேயே தமிழீழத் தேசிய தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டதோர் உன்னதமான மனிதர் இவரென்பது, தமிழின வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.
ஆயுதப் போர் மௌனிப்புக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் வெளியான பிரபல பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளைப் புனைபெயரில் எழுதிவந்தார். தமிழீழ மக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போரை, ஆவணமாக்கும் பெரும் முயற்சியில் அளப்பெரிய பங்காற்றிய இவர், போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு விடுதலை முழக்கம், நீந்திக் கடந்த நெருப்பாறு போன்ற பல நாவல்களைப் படைத்திருந்தார். கடும் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும், ஆனையிறவை தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி கொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக, 39 நாட்களில் நீந்தி கடந்த நெருப்பாறு என்ற தொடர் நாவலையும் வெளியிட்டிருந்தார்.
இவற்றை விட இவர் மழலைகளுக்காக கண்ணீர் மழலைகள் என்ற நாவலையும், சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக இடிபடும் இரும்பு கோட்டைகள் என்ற நாவலையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு படைப்பாளி நா.யோகேந்திரநாதன் அவர்கள் படைப்புத்துறைக்கப்பால் சிறந்த ஊடகவியலாளர், கூத்துக் கலைஞர், அரங்க நாடக நடிகர், வீதி நாடகத் தயாரிப்பாளர், சிறந்த குரல் வழங்குனர், சிறந்த விமர்சகர், நல்ல பேச்சாளர், தமிழீழத் தேசிய வானொலியான புலிகளின் குரல் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இறுதிவரை பயணித்தவர் எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது மிகவும் போற்றத்தக்க விடயமாகும். போர்க்காலத்தின் பின்னர் இவர் எழுதிய மூன்று நாவல்கள் அகில இலங்கை ரீதியில் விருதுகளை வென்றவை என்பது, தமிழினத்தின் படைப்பாற்றலுக்குக் கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
அன்னாரின் இழப்பால் மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்ப உறவுகள் அனைவரோடும், தமிழீழ அரசியல்துறை, தமிழீழ மக்களோடு இணைந்து தங்களது துயரில் பங்கெடுத்துக் கொள்கின்றது. அவர் அற்புதமானதோர் மனிதர், உன்னதமான தேசப்பற்றாளர். சுயநல வாழ்வைத் துறந்து எம்மின விடுதலைக்கு அரும்பணி ஆற்றிய, சிறந்த மனிதர்களுக்கு மதிப்பளித்து கௌரவம் செலுத்துவது தமிழரின் வரலாற்றுப் பண்பாடு. இந்தச் சீரிய மரபிற்கேற்ப, அவரது உறுதியான இனப்பற்றுக்கும், விடுதலை வேட்கைக்கும் மதிப்பளித்து, அவர் ஆற்றிய விடுதலைக்கான நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக, தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான “மாமனிதர்” விருதினை, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, படைப்பாளி நா.யோகேந்திரநாதன். அவர்களுக்கு வழங்குவதில், தமிழீழ அரசியல்துறையினராகிய நாம் பெருமை அடைகின்றோம் சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உன்னத மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
திருமதி. ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info